பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

by Staff Writer 07-11-2018 | 8:11 AM
Colombo (News 1st) பொலன்னறுவை பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பொலன்னறுவை - மனம்பிட்டிய பகுதியை ஊடறுத்து செல்லும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதேவேளை, நேற்று மாலை நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பனிமூட்டம் காரணமாக ஹற்றன் - நுவரலியா மற்றும் ஹற்றன் - கொழும்பிற்கான பிரதான மார்க்கங்களினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டுக்கு மேலான வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளது. இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் வட கிழக்கு பகுதியிலும் கடும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.