தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்

by Bella Dalima 07-11-2018 | 6:42 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தீர்மானங்கள் எவையும் எட்டப்படவில்லை என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதிக்குத் தாம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் அறிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். தாம் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கூட்டமைப்பினரை தௌிவுபடுத்தியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன், நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூக நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவருடன் கலந்தாலோசித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வழங்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை விரைவில் அடைவதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னதாகவே பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தமது குழுவினர் வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.