சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தல்
by Staff Writer 07-11-2018 | 4:30 PM
Colombo (News 1st) தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாக எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியுள்ளனர். இதில் எந்த அர்த்தமும் இல்லை. இது தான் வரலாறு என நன்கு தெரிந்தே அவர்களோடு கரம் கோர்த்து, பதவிகளைப்பெற்று, பணம் பெற்று, உலகிற்கு நல்லாட்சி என்று கூறி அதனை விடவும் ஒரு படி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம்.
நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம். அரசியலமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது பிரச்சினைகளுக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும் அரசியல் அபிலாஷைகளையும் கரைத்து விட்டோம்.
என சி.வி.விக்னேஷ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்சி நலன்களைப் புறந்தள்ளி விட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரலொன்றுக்கு அமைவாக தற்போது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதைப் புரிந்துகொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்குமாறும் உறுப்பு நாடுகளையும் ஏனைய நாடுகளையும் தான் கேட்டுக்கொள்வதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.