முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிப்பதே இலக்கு

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிப்பதே இலக்கு - பென் போக்ஸ்

by Staff Writer 07-11-2018 | 11:20 AM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதே தமது இலக்கு என இங்கிலாந்து அணியின் அறிமுக வீரரான பென் போக்ஸ் கூறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களை பெற்றிருந்தது. அணியின் முதல் 5 விக்கெட்களும் 103 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் பொறுப்புடன் விளையாடிய பென் போக்ஸ் இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். பென் போக்ஸ் ஏழாவது விக்கெட்காக ஷாம் குரானுடன் இணைந்து 88 ஓட்டங்களை பகிர்ந்தார். கன்னி அரைச்சதத்தை எட்டிய பென் போக்ஸ் 88 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். அவர் இலங்கையின் கொல்ட்ஸ் கழக அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விக்கெட்களைப் பறிகொடுக்காமல் ஓட்டங்களைக் குவிப்பதே எனது இலக்காக இருந்தது. அதுவே எனது போட்டி தீர்மானமாகவும் இருந்தது. போட்டி ஆரம்பமானவுடன் ஆடுகளத்தின் தன்மையை கருத்திற் கொள்ளவில்லை. இதனால் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. எனினும், அதன்பின்னர் சுதாகரித்துக் கொண்ட நாங்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினோம். 30 ஓட்டங்களுக்கு 4 அல்லது 5 விக்கெட்கள் வீழ்த்தப்படுவதற்காக சாத்தியங்கள் இருந்தன. கீட்டன் ஜென்னிங்ஸ் உள்ளிட்ட எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். இலங்கையின் முதல்தர போட்டிகளில் விளையாடியமையால் அகில தனஞ்சய மற்றும் டில்ருவன் பெரேராவின் பந்துவீச்சு பாணியை கற்றுக்கொள்ள முடிந்தது. அதுமாத்திரமன்றி இலங்கையின் காலநிலைக்கும் இசைவாக்கமடைய கூடியதாக இருந்தது என இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென் போக்‌ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.