இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

by Staff Writer 07-11-2018 | 8:11 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களுடன் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. 87 ஓட்டங்களுடன் ஆட்டத்தை ஆரம்பித்த அறிமுக வீரரான பென் போக்ஸ் முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார். இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 5 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் இழந்தது. அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் அணித்தலைவர் டினேஷ் சந்திமால் ஜோடி 75 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் கொடுத்தது. டினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடன் வெளியேற அஞ்சலோ மெத்யூஸ் 52 ஓட்டங்களைப் பெற்றார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்திற்கு வீரர்கள் தங்களின் மரியாதையை செலுத்தினர். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 203 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. மொயின் அலி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 139 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கீட்டன் ஜென்னிங்ஸ் 26 ஓட்டங்களுடனும் ரொரி பேர்ன்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.