பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்: சபாநாயகர் வலியுறுத்தல்

பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்: சபாநாயகர் வலியுறுத்தல்

பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்: சபாநாயகர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2018 | 8:37 pm

Colombo (News 1st) எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியதன் பின்னர் நிலையியற்கட்டளையை இரத்து செய்து, நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான இயலுமை தொடர்பில் பெரும்பான்மையினரின் கருத்துக்களை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பு தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்விற்கான ஒழுங்கு பத்திரத்தை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு இன்று நடைபெற்றதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினூடாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஜனாதிபதியின் கட்டளையை வாசித்ததன் பின்னர் அன்றைய தினத்திற்கான சபை நடவடிக்கையை நிறைவு செய்து ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த கருத்திற்கு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பெரும்பான்மையினரின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பெரும்பான்மையினரின் கருத்துக்களை கேட்டறிவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று மாலை நடைபெற்றது.

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, அதற்கான செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்விற்கான ஆசன ஒதுக்கீடு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை நியமிக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப ஆசனம் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதற்காக சபாநாயகரின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்