அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை

by Staff Writer 07-11-2018 | 12:46 PM
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் வௌியாகி வருகின்ற நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையினுடைய அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு 218 ஆசனங்களைப் பெறவேண்டிய நிலையில், ஜனநாயகக் கட்சி 195 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி 180 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதாவது, குடியரசுக் கட்சியிடம் இருந்த 21 ஆசனங்களை, ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பினுடைய ஆட்சிக் காலத்தின் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு தற்போதுள்ள ஆதரவுத்தளம் தொடர்பில் அறிவதற்கான தேர்தலாக இந்த இடைக்காலத் தேர்தல் அமைந்துள்ளது. அதனடிப்படையில், பிரதிநிதிகள் சபையில் அவரின் கட்சி தக்கவைத்திருந்த பல ஆசனங்களை இழந்துவருவதுடன், பின்னடைவினையும் சந்தித்துள்ளது. இருப்பினும், செனட் சபையினுடைய அதிகாரத்தை குடியரசுக்கட்சி தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபையில் குடியரசுக்கட்சி தற்போது 50 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள அதேவேளை, ஜனநாயகக் கட்சி 39 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சியின் வசமிருந்த 2 ஆசனங்களை செனட்சபையில் குடியரசுக்கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் முடிவுகள் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.