ஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி

by Staff Writer 06-11-2018 | 3:42 PM
Colombo (News 1st)  தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக பகைமையினால் ஏற்பட்ட பல்வேறு வேதனைகளை சுமந்து நிற்கும் ஒரு சமூகம் என்ற வகையில், இனங்களுக்கு இடையேயான பகைமையை நீக்கி, புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதன் மூலமே நாடும் மக்களும் நலம் பெறுவர் என்பதை நமது சமூகம் மிக நன்றாக உணரந்திருக்கும் இந்த தருணத்திர் மலரும் தீபாவளி பண்டிகை நம்மவர்களுக்கு இடையிலான கலாசார பந்தத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அஞ்ஞானம் எனும் இருளை அகற்றும் வகையில் ஔி தீபங்களை ஏற்றி உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியூடாக கூறியுள்ளார். ஒளி தரும் தீபங்களால் தீமை எனும் இருள் அகன்று நன்மையெனும் ஔி எழுவதை போல் வாழ்க்கையிலும் ஔி எழ வேண்டும் என்பதை தீபாவளி பண்டிகை குறித்து நிற்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தீமையை போக்கும் தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அதேவேளை, அன்பையும் நற்பண்புகளையும் வளர்க்க முயற்சிக்கும் நம்மவர்களுக்கும் உலகவாழ் இந்துக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் தீபாவளி வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார். நாட்டின் நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கு தமிழ், இந்து மக்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மிக அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். தீபாவளியுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் சமய அனுஷ்டானங்கள், விழா செயற்பாடுகள் அனைத்தும் நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் இந்து பக்தர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகள் என்பன பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த தீபத்திருநாளானது தீயசக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமைவதோடு, மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தினையும் அடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.