பிரதமரை நீக்கியது அரசியலமைப்பிற்கு விரோதமானது: அமெரிக்கத் தூதுவருக்கு தௌிவூட்டிய சம்பந்தன்

பிரதமரை நீக்கியது அரசியலமைப்பிற்கு விரோதமானது: அமெரிக்கத் தூதுவருக்கு தௌிவூட்டிய சம்பந்தன்

பிரதமரை நீக்கியது அரசியலமைப்பிற்கு விரோதமானது: அமெரிக்கத் தூதுவருக்கு தௌிவூட்டிய சம்பந்தன்

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2018 | 7:16 pm

Colombo (News 1st)  தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பிளவுபடாத பிரிக்க முடியாத நாட்டிற்குள் உண்மையான, ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றினை அடைவது அத்தியாவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் அத்தகைய தீர்வினை அடைய முடியாத பட்சத்தில், நாடு எதிர்நோக்கியுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாமற்போகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz-க்கும் இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தூதுவரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், கடந்த வாரத்தில் பிரதமரை நீக்கியமை உள்ளடங்கலாக இடம்பெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உடனடியாக செயற்பட்டு பாராளுமன்றத்தினைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் சபாநாயகரை எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டதாயும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில், அமெரிக்கா தொடர்ந்தும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பினை வழங்கவேண்டும் என தூதுவரை இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் Alaina B. Teplitz ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவதனை அமெரிக்கா வலியுறுத்துவதாகவும் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஜனநாயக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் நோக்கத்திற்கும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்கத் தூதுவரோடு அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி பொறுப்பாளர் ரொபர்ட் ஹில்டன் மற்றும் அரசியல் பிரிவின் பொறுப்பாளர் அன்ரனி ரென்சூலி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்