பாராளுமன்ற வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்

பாராளுமன்றை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்

by Staff Writer 05-11-2018 | 7:06 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் இன்று (05) நண்பகல்12 மணி முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற வீதியின் தியத்த உயன, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று நண்பகல் முதல் அப்பகுதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார். மாலபே, அத்துருகிரிய பகுதிகளிலிருந்து கொழும்பிற்கு பிரவேசிக்கும் மற்றும் பன்னிப்பிட்டிய, ஹோக்கந்தர, தலவத்துகொட ஊடாக கொழும்பிற்கு பிரவேசிப்பவர்களும், குறித்த வீதிகளூடாக கொழும்பிலிருந்து வௌியேறுபவர்களும் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதால் மாற்று வீதிகள் தொடர்பிலும் பொலிஸார் அறிவித்துள்ளனர். கடுவெல, அத்துருகிரிய, பிரதேசங்களிலிருந்து மாலபே ஊடாக பத்தரமுல்ல, மற்றும் கொழும்பிற்கு பயணிப்பவர்கள், கொஸ்வத்த சந்தியூடாக அல்லது பத்தரமுல்ல சந்தியூடாக வலப்பக்கம் திரும்பி, கியன்னேம் சுற்றுவட்டத்திற்கு பயணித்து அதனூடாக நாவல வீதி வரை செல்ல முடியும், நாவல சந்தியூடாக வலப்பக்கம், நாரஹேன்பிட்ட நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பன்னிப்பிட்டிய, ஹோக்கந்தர, தலவத்துகொட ஊடாக கொழும்பிற்கு பிரவேசிப்பவர்களுக்கும் பொலிஸார் மாற்றுவீதிகளை அறிவித்துள்ளனர். தலவத்துகொட சந்தியின், கிம்புலாவல சந்தி, பாகொட வீதி, நாவல வீதியூடாக வெலிக்கடைக்கு பயணிக்க முடியும். நண்பகல் 12 மணிக்கு பின்னர், கடுவெல, அத்துருகிரிய, பிரதேசங்களிலிருந்து மாலபே நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டப்பாதையின் அல்லது வெலிக்கடை வீதியின் புத்கமுவ வீதிக்கு சென்று, புத்கமுவ வீதி, அம்பகஹ சந்தி, கலபலுவாவ வீதி, ஹீனட்டிகும்புர வீதியூடாக கொஸ்வத்த சந்திக்கு சென்று, அங்கிருந்து வழமையான பாதையில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர், இதேவேளை, அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள பேரணி காரணமாக சுமார் 1,200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.