பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷா வித்தானகே விடுதலை

மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோர் பிணையில் விடுதலை

by Staff Writer 05-11-2018 | 4:33 PM

மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் ​மேற்கொண்டு காயமேற்படுத்தியமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஆஜராகிய இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர். கடந்த முதலாம் திகதி அலரி மாளிகை முன்றலில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் வலுப்பெற்றதை தொடர்ந்து சந்தேகநபர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்தி சிறு காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டு மத்தியஸ்த சபையில் சமரசம் செய்யக்கூடியது என்பதால் அவர்களை பிணையில் விடுவித்து, வழக்கை மத்தியஸ்த சபைக்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.