புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னைய நிலையை ஏற்பதாக சபாநாயகர் தெரிவிப்பு

புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னைய நிலையை ஏற்பதாக சபாநாயகர் தெரிவிப்பு

புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னைய நிலையை ஏற்பதாக சபாநாயகர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2018 | 11:19 am

Colombo (News 1st) புதிதாக ஒரு தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை, முன்னைய நிலையை ஏற்க வேண்டிய நிலை தமக்கு எற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு குழப்பநிலையை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், இதுவரை காலமும் மௌனித்து இருந்தபோதிலும், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் மனசாட்சியின்படி செயற்படுவதும் எனது தேசிய பொறுப்பு என்பதை நினைவுகூறுகின்றேன்.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்தும் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என நான் உணர்கின்றேன்.

பாராளுமன்றத்தை சட்டரீதியாக கூட்டுவதற்கு இடமளிக்காமல், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக பெரும்பாலானோர் தெரிவிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நியாத்தின் அடிப்படையில் எனது நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைப்பது அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணான, சம்பிரதாயத்திற்கு விரோதமானது என பெரும்பாலானோரின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில் புதிதாக ஒருதரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான இயலுமை கிடைக்கும் வரை முன்னைய நிலையை ஏற்க வேண்டியநிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகத்தில் இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், ஆயுதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெறுக்கத்தக்க செயல் என்பதை இறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என சபாநாயகரின் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்