அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 03-11-2018 | 7:26 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மேம்பாடு மற்றும் எதிர்கால அதிபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் அதிகம் தேடுவதை விடுத்து, திணைக்களங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் தமக்குரிய பணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய வேண்டியதைப் பார்க்க வேண்டியதே சிறந்தது என ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்திருந்தார். இதேவேளை, நாட்டின் வன அடர்த்தியை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக, 2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். வரட்சியினால் பாதிப்புற்ற நெற்செய்கைக்காக, விதை நெல்லை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் சுற்றுநிரூபமொன்றைத் தயாரிப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.