மஹிந்த சார்பில் ரணிலை சந்தித்த கோட்டாபய 

மஹிந்த சார்பில் ரணிலை சந்தித்த கோட்டாபய 

by Bella Dalima 02-11-2018 | 7:26 PM
Colombo (News 1st)  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இடையே நேற்று (01) மாலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் பிரதிநிதியாக கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்ததாக, இந்த சந்திப்பு தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். எவ்வித வெளிநபர்களின் பங்கேற்பும் இன்றி பகிரங்கமற்ற கலந்துரையாடலாக, மாலை 4.10 இல் இருந்து 4.17 வரை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது குழப்ப நிலை அல்லது சர்வதேசத்தின் முன்னிலையில் எதிர்மறையான விம்பமொன்று உருவாகுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள் பெரும்பான்மையானவர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெற்றிகொண்டுள்ளதாக, ரணில் விக்ரமசிங்கவிடம் கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு, பாராளுமன்றத்தின் நம்பிக்கையை உறுதி செய்யத் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலின் போது பரிமாற்றப்பட்ட கருத்துக்களை வரவேற்பதாக ரணில் விக்ரமசிங்கவின் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். நாட்டிற்குள் வன்முறையைத் தவிர்ப்பதற்கு அவர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்ததாக ரணில் விக்ரமசிங்கவின் பிரிவினர் குறிப்பிட்டனர். இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்திற்குள் தீர்க்கப்பட வேண்டியவொன்று என ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்களின் ஆதரவு காணப்படுகின்றது என்பதை உறுதி செய்ய பாராளுமன்றத்திற்கு வெளியே மக்களிடம் செல்வதற்கு தயார் எனவும் ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.