பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாது புரிந்துணர்வுடன் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள்

by Staff Writer 01-11-2018 | 4:37 PM
 Colombo (News 1st) அடிப்படையற்ற பொய் பிரசாரங்களுக்கு ஏமாறாது புரிந்துணர்வுடன் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஸ்திரத்தன்மைக்குமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் தேசிய உணர்வோடு, புரிந்துணர்வுடன் செயற்படுதல் மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை சீர்குலைப்பதற்காக பல்வேறு தரப்பினரும் சில திட்டமிட்ட அணிகளும் தற்போது பல்வேறு வழிமுறைகளினூடாக போலியான, தவறான வழியில் இட்டுச்செல்லும் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் இத்தகைய தவறான மற்றும் அடிப்படையற்ற கருத்துக்களும் செய்திகளும் பரப்பப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தவறான கருத்துக்களினூடாக நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தவும் வேலைத்தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அமைதியின்மையை உருவாக்கவும் இந்த குழுக்கள் முயற்சிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகப்பூர்வ தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு உள்ளதால், உறுதி செய்யப்பட்ட தகவல்களை அத்திணைக்களம் துரிதமாக மக்களுக்கு வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.