இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவுத் தலைவருக்கு விளக்கமறியல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவுத் தலைவருக்கு விளக்கமறியல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவுத் தலைவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2018 | 9:37 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் பியல் நந்தன திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலோ அல்லது ஒளிபரப்பு உரிமை பெற்ற வெளிநாட்டு நிறுவனத்தின் மின்னஞ்சலிலோ அத்துமீறி எந்தவொரு வெளிநபரும் பிரவேசிக்கவில்லை என நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பியல் நந்தன திசாநாயக்க முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, குறித்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக தகவல்களைத் திரட்டி சமர்ப்பிக்குமாறு 19 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு சொந்தமான கைத்தொலைபேசிகள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குத் தகவல்களை வழங்குமாறு 7 தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதவான் ஆணையிட்டார்.

3 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதி மோசடி குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவுத் தலைவரான பியல் நந்தன திசாநாயக்க கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய சுமார் 3 கோடி ரூபா, தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக பியல் நந்தன திசாநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் விஜயத்திற்கான ஒளிபரப்பு உரிமைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 11 மில்லியன் அமெரிக்க டொலர்களில் முதல் கொடுப்பனவான 5.5 மில்லியன் டொலர்களை வெளிநாட்டு தனியார் வங்கியொன்றில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தென்னாபிரிக்க விஜயத்தின் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைக்கான இறுதிக் கொடுப்பனவு அமெரிக்காவில் தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்