யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின 

யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின 

யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சி: கிழக்கின் பல வீதிகள் நீரில் மூழ்கின 

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2018 | 7:26 pm

Colombo (News 1st) இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்தில் 137.5 மில்லிமீட்டர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஒட்டுசுட்டானில் 132 மில்லிமீட்டரும் நெடுங்கேணி பகுதியில் 110 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடும் மழையையடுத்து மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்தமையால், நகரிலுள்ள பெரும்பாலான வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு – கிரான் தெற்கு பிரதேச செயலகப் பிரிவின் பூலாக்காட்டு பொதுநோக்கு மண்டபத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.

இதேவேளை, கிரான் – குடும்பிமலை பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், 7 படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிரான் பிரதேச செயலகத்தினரும் கடற்படையினரும் இணைந்து இந்த படகு சேவையை முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கிரான் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று சென்றிருந்தனர்.

கிரான், பூலாக்காடு, முக்கன்தீவு, சாராவௌி, பிரம்படித்தீவு, அக்கராணை மற்றும் முறுத்தானை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாங்கேணி தேவாலயத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.

காயங்கேணியிலுள்ள சுனாமி பொதுக்கட்டடத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வாகரை ஊரியன்கட்டு கிராம சேவகர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளதாக கிராம சேவகர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் பிரதான ஆற்றுவாய் வெட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தன.

திருகோணமலை – மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தில் வௌ்ளம் தேங்கியுள்ளதால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மூதூரில் இருந்து சம்பூருக்கு செல்கின்ற பிரதான வீதியின் மணிக்கூட்டு கோபுரச்சந்தி ஊடாக மழை நீர் வடிந்தோடுகிறது.

இதனால், பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்த வீதியூடாக பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

கிண்ணியா பிரதேசத்திலுள்ள சில வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் புகுந்துள்ள நீரை வௌியேற்றும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனையிலிருந்து – கல்லோயா குடியேற்ற கிராமங்களுக்குச் செல்லும் கிட்டங்கி வீதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்கும் பட்சத்தில் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்படும் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வீதியில் பாலம் அமைக்குமாறு பிரதேச மக்களால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாகவும் அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 19 அடி 4 அங்குலமாகவும் காணப்படுகின்றது.

கல்மடுக்குளம், கரியாலை நாகபடுவான் குளம் , முறிப்புக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

கிளிநாச்சி – ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கிளிநாச்சியில் உள்ள 7 ஆவது காலாற்படையினரால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேருக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவினை வழங்குவதற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா – நாகர் இலுப்பைக்குளத்தில் முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்குளம் வீதியில் குறித்த முதலை காணப்பட்டதையடுத்து, அதனைப் பிடிப்பதற்கு இளைஞர்கள் சிலர் முற்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்ததையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அங்கு சென்றனர்.

சுமார் 10 அடி நீளமான முதலை கடும் சிரமத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வர குமார் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் சாலம்பன்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில், நீர்ப்பெருக்கைத் தடுக்கும் பணியில் இராணுவத்தினர் இன்று ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களைச் சேர்ந்த 647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.