இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்:  இலங்கை 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2018 | 9:43 pm

Colombo (News 1st) இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 462 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 342 ஓட்டங்களையும், இலங்கை 203 ஓட்டங்களையும் பெற்றன.

மூன்றாம் நாளான இன்று விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து, முதல் ஒரு மணித்தியாலத்தில் 3 விக்கெட்களை இழந்தது.

டொரி பேர்ன்ஸ், மொயின் அலி, அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

எனினும், பென் ஸ்டோக்ஸ் 62 ஓட்டங்களைப் பெற்றதுடன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய கீட்டன் ஜென்னிங்ஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

கீட்டன் ஜென்னிங்ஸ் ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களைப் பெற்றதுடன், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.

ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

462 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களுடனும், கௌசால் சில்வா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.