அரசியல் நிலை தொடர்பில் ஐ.நா சபைக்கு ஜனாதிபதி தௌிவூட்டல்
by Staff Writer 31-10-2018 | 4:46 PM
Colombo (News 1st) இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜனாதிபதி தௌிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாத்து ஜனநாயக விழுமியத்துடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கும் ஒத்துழைப்பிற்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தமிழ் தேசிய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.