by Bella Dalima 26-10-2018 | 4:24 PM
Colombo (News 1st) தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக அரச சேவையாளர்களின் சம்பள மீளாய்விற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் சம்பள உயர்வு மேற்கொள்ளப்படும் என சம்பள மீளாய்விற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய, அடுத்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் போது சிறந்த வழிமுறைகளைப் பின்பற்ற முடியும் என சம்பள மீளாய்விற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது அமர்வின் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரச சேவையாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கான பல பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ். ரனுகேவின் தலைமையில் 15 பேர் அடங்கலாக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், தேசிய சம்பளக் கொள்கையைத் தயாரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சம்பள மீளாய்விற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.