சர்கார் படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சர்கார் படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

by Bella Dalima 25-10-2018 | 4:16 PM
‘சர்கார்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரின் மனுவில் கூறியிருப்பதாவது:-
செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையைத் திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர். முருகதாஸ் படம் இயக்கி உள்ளார். இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும் ஒரே கதை தான் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்.
என கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டார். வழக்கிற்கு பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.