தன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா?

தன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா?

தன்னார்வமாக சேவையாற்றியவர்களுக்கு அநீதி இழைப்பதா?

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2018 | 10:21 pm

Colombo (News 1st) யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தை விடவும் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பற்ற கிராமங்களிலேயே கல்வி நிலை பெரிதும் சரிவடைந்தது.

அதிலும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

குறித்த பாதுகாப்பற்ற பகுதிகளில் வசித்தவர்கள் தன்னார்வமாகக் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முன்வந்தமையால், பாடசாலைகளின் செயற்பாடுகளை ஓரளவு முன்னெடுப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது.

தன்னார்வ ஆசிரியர்களின் சேவை காரணமாக பாடசாலைகள் ஓரளவு இயங்கியதால், குறித்த பிரதேசங்கள் மக்கள் சூனியப் பிரதேசங்களாக மாறும் நிலை தவிர்க்கப்பட்டது.

10 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பற்ற பகுதிகளில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் பிற்காலத்தில் இலங்கை ஆசிரிய சேவையின் மூன்றாம் வகுப்பின் இரண்டாம் தரத்திற்கு முறையான நேர்முகத் தேர்வு நடைமுறைக்கு அமைவாக உள்வாங்கப்பட்டனர்.

இவ்வாறு உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் இணைவதற்கான வாய்ப்புக் கிடைக்காத 456 பேருக்காக அடுத்த மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் நேர்முகத் தேர்வுகளை நடத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்திற்கு இணையாக நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவுள்ள 456 பேரின் பெயர் விபரங்களை கல்வி அமைச்சு பகிரங்கப்படுத்தியுள்ளது.

456 பேரை ஆசிரிய சேவைக்கு உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபையே முன்வைத்திருந்தது.

கிழக்கு மாகாண சபை கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வுகளை நடத்தி குறித்த 456 பேரை தெரிவு செய்து விபரங்களை கடந்த மே மாதம் வௌியிட்டிருந்தது.

இந்தப் பட்டியலில் இருந்த 122 பேரது பெயர்கள் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குப் பதிலாக புதிதாக 122 பேரின் பெயர்கள் கல்வி அமைச்சுப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

புதிதாக 122 பேரின் பெயர்கள் குறித்த பட்டியலில் சேர்க்கப்பட்டமைக்கான அடிப்படைக் காரணங்களை அறிவதற்காக மாகாண சபை வௌியிட்ட பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த 456 பேரும் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக அணி திரண்டனர்.

தன்னார்வமாக ஆசிரியக் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு நியாயத்தை வழங்கும் போர்வையில் அரசியல் தேவைக்காக தமக்கு நெருக்கமானவர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கும் இந்த முயற்சி அருவருக்கத்தக்கதல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்