by Staff Writer 25-10-2018 | 2:06 PM
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாக சவுதி அரேபிய மன்னர் மொஹமட் பின் சல்மான் (Mohammad Bin Salman) தெரிவித்துள்ளார்.
தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற வணிகக்குழுக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றமானது, அனைத்து சவுதி மக்களுக்கும் வலியைத் தருவதாக அமைந்துள்ளதுடன், நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான செயல் எனவும் அவர் வருத்தம் வௌியிட்டுள்ளார்.
அத்துடன், இந்தக் குற்றத்தின் பின்னால் இருப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதுடன், நீதியே இறுதியில் வெல்லும் எனவும் மன்னர் சல்மான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
துருக்கியுடன் சவுதி அரேபியாவுக்கு இருக்கும் நல்ல உறவில், இந்த சூழலைப் பயன்படுத்தி மோதல் ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இருப்பினும், அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் மன்னர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவுதியின் முடியாட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோகி, கடந்த 2ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்திற்குச் சென்ற நிலையில், பின்னர் காணாமற்போயிருந்தார்.
துணைத் தூதரகத்திற்குள் இடம்பெற்ற மோதலில் அவர் கொலை செய்யப்பட்டதை 18 நாட்களின் பின்னர் சவுதி அரேபியா ஒப்புக்கொண்டிருந்தது.
ஜமால் கஷோகியின் கொலை, சவுதியின் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர்மட்ட அதிகாரிகளால் பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை சவுதி மன்னர் சல்மான் மறுத்திருந்ததுடன், கூலிப்படையினரே இந்தக் கொலைக்குக் காரணம் என சவுதி அரேபிய அரசு அறிவித்திருந்தது.
இதேவேளை, ஜமால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதி அரேபியா நடந்துகொண்ட விதம் மிக மோசமான மூடிமறைப்பாக இருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.