அடிப்படைச் சம்பளம் 600 ரூபா என தீர்மானம்; 1000 ரூபாவை வலியுறுத்தும் தோட்டத்தொழிலாளர்களின் போராட்டம் உக்கிரம்

அடிப்படைச் சம்பளம் 600 ரூபா என தீர்மானம்; 1000 ரூபாவை வலியுறுத்தும் தோட்டத்தொழிலாளர்களின் போராட்டம் உக்கிரம்

அடிப்படைச் சம்பளம் 600 ரூபா என தீர்மானம்; 1000 ரூபாவை வலியுறுத்தும் தோட்டத்தொழிலாளர்களின் போராட்டம் உக்கிரம்

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2018 | 8:27 pm

Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தலவாக்கலை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் 5 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.

பதுளை – பசறை பிரதான வீதியை மறித்து, நான்கு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பண்டாரவளை – தெமோதர நெதர்வில தோட்டத்தொழிற்சாலைக்கு முன்பாக இன்று பேரணியொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியை பேரணி சென்றடைந்ததும் தெமோதர சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

வீதியில் அமர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொட்டகலை ரொசிட்டா நகரில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொசிட்டா நகரில் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தொழிலாளர்கள் தமது கோரிக்கையை வலியுறுத்தினர்.

1000 ரூபா அடிப்படை சம்பள அதிகரிப்புக் கோரி, மாத்தளை ரத்வத்தவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதுடன், அதே கோரிக்கையை முன்னிறுத்தி கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக மாணவர்களும் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

 

 

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு அவர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்திற்கு தாம் வழங்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

 

 

இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் நாளை (26) கம்பனிக்காரர்களுடனும் தொழில் அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு பதிலைத் தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவைக் கேட்கப் போவதாகவும் பிரதமரின் பதில் தெரிந்த பிறகே அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்க முடியும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.

 

இந்நிலையில், தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப, தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கினால் கூட அவர்களுக்குப் போதாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், அரசாங்கம் கூட்டு ஒப்பந்தம் என்று சொல்லி இந்த விடயத்தில் இருந்து நழுவப் பார்ப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

 

எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாளுக்கான அடிப்படைச் சம்பளத்தை 600 ரூபாவாக பெருந்தோட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

அடிப்படை சம்பளத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான தீர்மானம் பெருந்தோட்ட சம்மேளனத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுனில் போஹொலியத்த கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் 1000 ரூபா சம்பள உயர்வை தம்மால் வழங்க முடியாது எனவும் அது தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறையில் தம்மால் ஈடு செய்ய முடியுமான கோரிக்கை அல்ல எனவும் சுனில் போஹோலியத்த மேலும் தெரிவித்தார்.

 

 

இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் (23) ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று யட்டியந்தோட்டையைச் சென்றடைந்தது

நடைபயணம் யட்டியந்தோட்டை பிரதேச சபையைச் சென்றடைந்த போது, சபையின் உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கினர்.

பொகவந்தலாவையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம் கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

17 கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்