CNN நிறுவனத்திற்கு வெடிகுண்டுப் பொதி 

CNN நிறுவனத்திற்கும் பராக் ஒபாமா, ஹிலரி கிளிண்டனுக்கும் வெடிகுண்டுப் பொதி அனுப்பப்பட்டுள்ளது

by Bella Dalima 24-10-2018 | 10:24 PM
அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான CNN நிறுவனத்திற்கு வெடிகுண்டுப் பொதியொன்று அனுப்பப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் டைம் வோர்னர் கட்டடத்தில் அமைந்துள்ள CNN செய்தி ஊடக நிறுவனத்தின் தலைமை காரியாலயத்திற்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று கிடைக்கப் பெற்றதாக அதன் தலைவர் ஜெப் சுக்கர் உறுதிசெய்துள்ளார். காரியாலயத்தின் மின்னஞ்சல் அறையில் குறித்த பொதி காணப்பட்டதாகவும் பின்னர் அது அகற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோரால் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் ஆகியோருக்கும் வெடிபொருள் பொதி அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், CNN ஊடக நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாப்பாகுவாவில் அமைந்துள்ள கிளிண்டனின் வீட்டில் கடிதங்களை ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தியபோது இந்தப் பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த பொதிகள் காணப்பட்டமையினால் அவை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதனால் எவ்வித ஆபத்துகளும் நேரவில்லை எனவும் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.