கடும்மழை: 3 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான கதவுகள் திறப்பு

by Staff Writer 24-10-2018 | 8:36 AM
Colombo (News 1st) மத்திய மலைநாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்க்களில் நீர்மட்டம் வான் மட்டத்தை அடைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, குறித்த நீர்த்தேக்கங்களில் தன்னியக்க வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மகாவலி ஆற்றை பயன்படுத்துவோரை அவதானமாக செயற்படுமாறு கோரப்படுகின்றது. இதேவேளை, நேற்றிரவு முதல் ரன்டெம்பே நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 4 தடவைகள் திறக்கப்பட்டதாக ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கங்களுக்கு பொறுப்பான கடமைநேர அதிகாரி கே.டீ.பீ. ராஜரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம், கடும் மழை காரணமாக நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.