வடக்கு, கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வலு சேர்க்க வடக்கு, கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 24-10-2018 | 7:39 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பழைய கச்சேரி முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மாணவர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு புகையிரத நிலைய முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, திருகோணமலை சமூக ஆர்வலர்கள் இணைந்து 'உரிமைக்காய் போராடும் தோட்டத்தொழிலாளர்களுடன் கைகோர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் அநுராதபுர சந்தியில் உள்ள சந்தைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஹட்டன் நகர வர்த்தகர்களும் நகரை அண்மித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மல்லிகைப்பூ சந்தியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.