Update: 1000 ரூபா சம்பள உயர்வைக் கோரி ஆர்ப்பாட்டம்

Update: பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 24-10-2018 | 7:31 AM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, கொழும்பில் இன்று (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கறுப்புச்சட்டை போராட்டம் என அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக, 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மலையகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி முதல் காலிமுகத்திடல் வரை மூடப்பட்டுள்ளது. நுவரெலியா - கந்தப்பளை நகரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்லொஜ், சமர்ஹில் டிவிசன், போர்ட்ஸ்வுட் டிவிசன், பார்க் எஸ்டேஸ், கொங்கோடியா, கந்தப்பளை டிவிசன் மற்றும் எஸ்கடேல் டிவிசனைச் சேர்ந்த மக்கள் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கந்தப்பளை நகரில் கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு நல்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் சுமார் 2 மணித்தியாலம் வரை போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேநேரம், ஹட்டன் நகர வர்த்தகர்களும் நகரை அண்மித்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மல்லியப்பூ சந்தியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் உள்ள வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.