கொழும்பில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்

பெருந்தோட்ட மக்களுக்காக கொழும்பில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்

by Bella Dalima 24-10-2018 | 8:30 PM
Colombo (News 1st) எந்தவொரு அரசியல் பின்புலமும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்காக கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. பன்னெடுங்காலமாக மறுக்கப்பட்டு வரும் தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை வலியுறுத்துவதே இந்தப் போராட்டத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. அமைதியான முறையில் அணி திரண்டு மக்களுக்காக மக்களே குரல் கொடுத்த போராட்டமாக இது வராற்றில் பதிவாகியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டாளராக ஒவ்வொரு இளைஞரும் மாறினர். கொழும்பில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் என பாகுபாடின்றி இந்த போராட்டத்திற்கான ஆதரவு வலுப்பெற்றது. எவரினதும் தூண்டுதலோ, அரசியல் நிகழ்சி நிரலோ அற்ற நிலையில், கருப்புச் சட்டைப் போராட்டமாக அவர்களின் முயற்சி மாற்றம் கண்டது. கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் காலி முகத்திடலுக்கு அருகே வீதியில் அமர்ந்து தமது கோரிக்கையை வலியுறுத்தினர். வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் ஜனாதிபதி செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொலிஸார் வீதித்தடையை ஏற்படுத்தியதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வராமையால் மக்களே இவ்வாறு கிளர்ந்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கலகத்தடுப்பு பொலிஸாரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸார் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கம் இவர்களிடம் காணப்படவில்லை. உழைப்பிற்கேற்ற ஊதியம் எனும் உரிமையைக் கோரும் மலையக சொந்தங்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரேயொரு ஒருமித்த நோக்கம். அரசியல்வாதிகளால் ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்களில் இடம்பெறும் வேறுவித நடவடிக்கைகளையோ ஒழுக்கமின்மையையோ இங்கு காணக்கிடைக்கவில்லை. உரிமைக்குரலாய் ஒருமித்து ஒலித்த அனைவரும் சிரம் தாழ்த்தி பாராட்டப்பட வேண்டியவர்களே.