நாளை மறுதினம் வரை  பலத்த மழை நீடிக்கவுள்ளது

நாளை மறுதினம் வரை  பலத்த மழை நீடிக்கவுள்ளது

by Staff Writer 24-10-2018 | 7:16 PM
Colombo (News 1st) இன்று முதல் நாளை மறுதினம் (26) வரை பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 - 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 25 மைல் கல்லுக்கு அருகாமையிலுள்ள பகுதி தாழிறங்கியுள்ளது. எல்ல - வெல்லவாய பிரதான வீதியூடான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வீதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எல்ல - வெல்லவாய பிரதான வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கண்டி - பன்வில - ஆத்தலை கீழ் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையை அடுத்து, ஆத்தலை கீழ் பிரிவு தோட்டத்தில் நிலம் தாழிறங்கியுள்ளதுடன், குடியிருப்புகளின் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த நான்கு வருடங்களாக மண்சரிவு அபாயத்திற்கு மத்தியிலேயே தாம் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் பல தரப்பினருக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர். பாதுகாப்பான இடமொன்றில் தமக்கான குடியிருப்புகளை அமைத்துத் தருமாறு வலியுறுத்தி, ஆத்தலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.