ஜமால் கொலை:சவுதி அதிகாரிகளின் அமெரிக்க விசா இரத்து

ஜமாலின் கொலையுடன் தொடர்புடைய சவுதி அதிகாரிகளின் அமெரிக்க விசா இரத்து

by Staff Writer 24-10-2018 | 10:03 AM
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடைய அடையாளம் காணப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்கள் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். ஜமால் கஷோகி கொடூரமாக கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக, அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதலாவது மிகப்பெரிய நடவடிக்கையாக இதுவாக அமைந்துள்ளது. ஜமால் கஷோகி திட்டமிடப்பட்​டே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அறிவித்ததைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், ஜமால் கஷோகி குறித்து சவுதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைப்பதற்குக் கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டெ்ரம்ப் தெரிவித்துள்ளார். "இந்தக் கொலையைத் திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், இந்த கொலை மிக மோசமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அத்தோடு, கொலையை செய்ய யோசித்தவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். நிச்சயம் அவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சவுதி அரேபியாவின் 21 அதிகாரிகளை அமெரிக்க சட்டவாளர்கள் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களது விசாக்கள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்திலும் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவே​ளை, ஜமாலை கொலை செய்ததன் காரணமாக சர்வதேச ரீதியில் சவுதி அரேபியா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் சவுதி மீதான தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தநிலையில், ஜமாலின் உடற்பாகங்கள் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.