அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

by Staff Writer 24-10-2018 | 6:56 AM
Colombo (News 1st) அரசியலமைப்புச் சபை நாளை (25) கூடவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரின் சேவையை மதிப்பிடுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இதேவேளை, அரசியலமைப்புச் சபை கூட்டத்தில் உயர்நீதிமன்றத்திற்கான நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க எதிர்பார்ப்பதாக அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, ஆணைக்குழுக்கள் பலவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த அமர்வில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அரசியலமைப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். ஏனைய உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க சமல் ராஜபக்ஸ மற்றும் தலதா அதுகோரள ஆகியோர் உள்ளதுடன் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாகநாதன் செல்வகுமாரன் கலாநிதி ஜயந்த தனபால, அஹமட் ஜாவீட் யூசுப் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.