இந்திய பிரஜையின் எழுத்துமூல சாட்சியம் சமர்ப்பிப்பு

ஜனாதிபதி கொலைச் சதி: சந்தேகநபரான இந்தியப் பிரஜையின் 20 பக்க எழுத்துமூல சாட்சியம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 23-10-2018 | 7:58 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை துன்புறுத்துவதாகத் தெரிவித்து நீதிமன்றத்தில் இன்று எழுத்து மூலஅறிக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 3 மணித்தியாலங்களாக 20 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த வாக்குமூலம் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் கையளிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். என். தோமஸ் என்றழைக்கப்படுகின்ற குறித்த இந்தியப் பிரஜை தமது எழுத்துமூல விளக்கத்தை நீதிவானிடம் கையளித்ததையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை அழைத்துச் செல்வதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதன்போது நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். தம்மை மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என குறித்த இந்தியப் பிரஜை இதன்போது கண்ணீர் மல்க நீதவானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய செயற்படுத்துவதற்கு நேரிடுவதாகத் தெரிவித்த நீதிமன்றம் இந்தியப் பிரஜையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தது. எனினும், தனது சகோதரரர் சிறந்த மனநிலையில் இல்லையென சந்தேகநபரின் சகோதரர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட குரல் பதிவு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட 124 இறுவட்டுக்களில் 123 இறுவட்டுக்களிலும் நாமல் குமார மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் குரல் பதிவுகள் காணப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் அறிவித்துள்ளது. நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் சில குரல் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இது குறித்த பரிசோதனைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்புவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றில் அனுமதி கோரியதுடன், அதற்கு நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கியுள்ளார். இதேவேளை, நாலக்க டி சில்வாவிடம் இன்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்தியது. போதுமான அளவு சாட்சியங்கள் இருந்தும் நாலக்க டி சில்வா கைது செய்யப்படாமைக்கு ஏதேனும் அழுத்தம் காரணமா என நாமல் குமார சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நாமல் குமார என்பவர் இலங்கை விமானப்படையில் சேவையாற்றி, அங்கிருந்து சட்டப்பூர்வமாக விலகாமல் இலங்கை இராணுவத்தில் சிறிது காலம் சேவையாற்றி பின்னர் அவன்ற்கார்ட் பாதுகாப்பு சேவையிலும் கடமையில் ஈடுபட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவர் இந்த கொலை சதி குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக குற்றவியல் சட்டக்கோவையின் 127 ஆவது சட்டத்தின் பிரகாரம் நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அத்தகைய வேண்டுகோளை விடுத்தால் மாத்திரமே அந்த அனுமதியை வழங்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதவான், நாமல் குமார் அல்லது அவரது சட்டத்தரணி அத்தகைய வேண்டுகோளை விடுக்காததால் வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.