இலங்கை - இங்கிலாந்து இடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி

இலங்கை - இங்கிலாந்து இடையேயான 5ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

by Staff Writer 23-10-2018 | 9:47 AM
Colombo (News 1st) இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில், இங்கிலாந்து 3 - 0 என கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியொன்றையாவது பெறுவதற்கு இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தை எதிர்க்கொண்டுள்ளது. இன்றைய போட்டியில் விளையாடவுள்ள இரு அணி வீரர்களும் நேற்றைய தினத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆரம்ப மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுடன் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி இன்றைய போட்டியில் ஓட்டங்களை குவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார். அதேநேரம், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமையால், அணி வீரர்கள் சிறந்த மனநிலையோடு இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், சர்வதேச ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடப்பதற்கு இங்கிலாந்தின் ஜோரூட்டுக்கு மேலும் 64 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது. அவர் இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களைப் பெறும் பட்சத்தில், ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களை வேகமாக கடந்த உலகின் 4ஆவது வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். தென்னாபிரிக்காவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹாசீம் அம்லா, மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் சேர். விவியன் ரிச்சட்ஸ், இந்திய அணித்தலைவர் விராட் ​கோஹ்லி ஆகியோர் ஏற்கனவே ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர். 1986ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 35,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும். இலங்கை அணி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இதுவரையில் 117 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 67 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 11 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வென்றுள்ளதோடு, ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதுடன், 2 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.