மலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு

மலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு

மலையக மக்களின் போராட்டத்திற்கு கிழக்கில் ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 8:25 pm

Colombo (News 1st)  தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்தில் மாத்திரமின்றி கிழக்கிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கை நிறுவன மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டுமென கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அகில இலங்கை அரச ஊழியர்கள் சங்கத்தின் கல்முனை ஊழியர்கள், கல்முனை மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான முறையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊழியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கேகாலை – தெரணியகலயில் சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உடபாகை சந்தியிலிருந்து தெரணியகல நகர் வரை பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தளை – பிட்டகந்த தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தம்பலகல, பிட்டகந்த, சின்ன செல்வகந்த, பெரிய செல்வகந்த ஆகிய 4 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

பிட்டகந்த தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள், தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாத்தளை – கந்தேநுவர பிரதான வீதியூடான போக்குவரத்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தடைபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியும் கறுப்புத் துணிகளை தலையில் கட்டியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரப்பத்தனை – மேல் கிரேன்ட்லி தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 ரூபா கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, தெல்தோட்டை – நூல்கந்துர சந்தியில் 5 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாரன்ஹின்ன பிரிவு , வல்ஓயா பிரிவு, நூல்கந்துர பிரிவு, அப்பகோணாவ பிரிவு உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உருவ பொம்மை எரித்து மக்கள் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.

தெல்தோட்டை பஸ் நிலையத்திற்கு முன்பாக போபிட்டிய தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து தெல்தோட்டை நகர் வரை சென்ற மக்கள் தெல்தோட்டை – கண்டி பிரதான வீதியில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மவசா பிரிவு , கிரேட் வெளி , படஹிர மற்றும் பட்டியகம பிரிவு போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்