நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 5:21 pm

Colombo (News 1st)  ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட குரல் பதிவு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்ட 124 இறுவட்டுக்களில் 123 இறுவட்டுக்களிலும் நாமல் குமார மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் குரல் பதிவுகள் காணப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் அறிவித்துள்ளது.

நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் சில குரல் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இது குறித்த பரிசோதனைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசியை ஹொங்காங்கிற்கு அனுப்புவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றில் அனுமதி கோரியதுடன், அதற்கு நீதவான் லங்கா ஜயரத்ன அனுமதி வழங்கியுள்ளார்.

போதுமானளவு சாட்சிகள் காணப்படுகின்ற போதிலும், அழுத்தமொன்றின் காரணமாகவே நாலக்க டி சில்வா இதுவரை கைது செய்யப்படவில்லை என நாமல் குமார சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாலக்க டி சில்வாவிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதுடன், அந்த செயற்பாடுகள் முடிவடைந்ததும் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றத்தில் ஆஜராகிய இந்திய பிரஜை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார்.

தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் எழுத்து மூலம் மன்றுக்கு அறிவிக்கத் தேவையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபரான இந்தியப் பிரஜைக்கு அதற்கான அனுமதியை நீதவான் வழங்கியுள்ளார்.

இதற்கமைய சந்தேகநபரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்