கொரிய எல்லையிலிருந்து ஆயுதங்களை அகற்ற இணக்கம்

கொரிய எல்லையிலிருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு இரு கொரியாக்களும் இணக்கம்

by Chandrasekaram Chandravadani 23-10-2018 | 8:25 AM
கொரிய எல்லையில் உள்ள தத்தமது பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் சோதனை நிலையங்களை அகற்றுவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வட மற்றும் தென் கொரியாக்களின் எல்லைப்பகுதியான பன்முன்ஜோமில் (Panmunjom), இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்புப் படையினரைக் கடமையில் ஈடுபடுத்தியிருந்ததுடன், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் கொண்டிருந்தன. இரு நாடுகளுக்குமிடையேயான பதற்ற நிலையைக் குறைப்பதே தற்போது இலக்காக உள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், எல்லையில் காணப்பட்ட கிட்டத்தட்ட 800,000 நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இரு நாட்டுப் படையினரும் ஆரம்பித்தனர். இந்தநிலையில், எதிர்வரும் 25ஆம் திகதியிலிருந்து, குறித்த எல்லையிலுள்ள ஆயுதங்கள் மற்றும் சோதனை நிலையங்களை அகற்றுவதற்கு வட கொரியாவும் தென் கொரியாவும் இணங்கியுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் ரஷ்யாவிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், வட கொரிய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (22) ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1950 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கொரிய யுத்தத்திலிருந்து, பன்முன்ஜோம் (Panmunjom) பகுதியே, இரு நாடுகளினதும் எல்லைப்பகுதியாகக் காணப்படுகின்றது. அந்த வகையில், குறித்த எல்லைப் பகுதியே இரு நாட்டு அரச தலைவர்களும் சந்திக்கும் இடமாகக் காணப்பட்டதுடன், குறித்த சந்திப்பு வருடமொன்றுக்கு இரு தடவைகள் இடம்பெறுமென்பதும் குறிப்பிடத்தக்கது.