அங்குணகொலபெலஸ்ஸ: தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கை

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கை

by Staff Writer 22-10-2018 | 6:58 AM
Colombo (News 1st) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்பில் 50 பேர் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 45 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 17 ஆம் திகதி முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் வௌிப்புற பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சிறைச்சாலையின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதுடன், வௌிப்பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரியிடம் வினவியபோது, எதிர்காலத்தில் வெலிக்கடை சிறைச்சாலை, புதிய மெகசீன் சிறைச்சாலை மற்றும் வெலிகம சிறைச்சாலைகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.