அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்

ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்

by Staff Writer 21-10-2018 | 10:32 AM
ரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். 1987ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட மத்தியதர தூர அணுவாயுத உடன்படிக்கை சரத்துக்களை, ரஷ்யா மீறியுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 500 முதல் 5,500 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த நிலத்திலிருந்து ஏவப்படும் அணுவாயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக்கூடாது என குறித்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேட்டோ நாடுகளால் SSC-8 என அழைக்கப்படும் நோவேட்டர்-9M729 எனும் நடுத்தர ரக அணுவாயுத ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை மூலம் நேட்டோ நாடுகளை ரஷ்யாவால் தாக்க இயலும் எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, ரஷ்ய அதிகாரிகளிடம் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவிப்பார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.