மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் வழக்கு நிராகரிப்பு

மாலைதீவு தேர்தல் முடிவை இரத்துச் செய்யுமாறு கோரிய கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 21-10-2018 | 5:51 PM

மாலைதீவில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யக்கோரிய முறைப்பாட்டை, அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் இது தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரி, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன் மாலைதீவு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மாலைதீவு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டினையும் பொலிஸ் விசாரணைக் கோரிக்கையையும் நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் சொலியிடம், ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார். முதலில் தமது தோல்வியை ஏற்றுக்கொண்ட அப்துல்லா யாமீன், பின்னர் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட வருமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து கடந்த 11 ஆம் திகதி மாலைதீவு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்து வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. 5 வருடங்கள் பதவியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், தமது பதவிக்காலத்தில் எதிர்க்கட்சியினர் உட்பட ஊடகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.