நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக மனு தாக்கல்

நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு தாக்கல்

by Staff Writer 20-10-2018 | 5:44 PM
Colombo (News 1st) உண்மைக்குப் புறம்பான சாட்சியம் வழங்கி நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக ஐாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், முறைப்பாட்டாளர் சார்பு முதலாவது சாட்சியாளராக நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க செயற்பட்ட விதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி சட்டத்தரணி, நலின் லல்துவஹெட்டி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். உண்மையை உரைப்பதாக உறுதியளித்து குறித்த சாட்சியாளரான நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க பொய் சாட்சியமளித்தமை நீதிமன்றத்திற்கு ஏற்பட்ட களங்கம் என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த சாட்சியாளருக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சியிடம் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர், சாட்சியாளர் வழங்கிய பொய் பிரசாரங்கள் குறித்து உரிய முறையில் நீதிமன்றத்தை தௌிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். வழக்கின் முறைப்பாட்டளர் தரப்பில் சாட்சி வழங்குவதற்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் அனுமதியுடன் சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு சென்றதாக அரச தரப்பு சட்டத்தரணி உதார கருணாதிலக்க, நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கிடைத்த அழைப்பிற்கிணங்க, வௌிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டிருக்குமாயின் கடந்த வழக்குத் தவணையின் போது அது தொடர்பில் ஏன் அறிவிக்கவில்லை என நீதிபதி அரச தரப்பு சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு அரச தரப்பு சட்டத்தரணி பதில் வழங்கவில்லை. இதேவேளை, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றும் தயானந்த பெரேரா, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளராக சாட்சியமளிப்பதை ஆரம்பித்துள்ளார். வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.