உருவ பொம்மைகளை எரித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

உருவ பொம்மைகளை எரித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 20-10-2018 | 7:32 PM
Colombo (News 1st) 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவைக் கோரி கொழும்பு - பதுளை பிரதான வீதியை ஹாலிஎல நகரில் மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹாலிஎல, உலுகல - மேமலை , உடுவர, றொக்கதென்ன ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு தடைப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். டயகம மேற்கு தோட்டத்தைச் சேர்ந்த ஆறு பிரிவுகள், வெவர்லி, போட்மோர், ஆடலி, மோனிங்டன் கீழ் பிரிவு, மேற்பிரிவு, சந்திரிகாமம், யரவல், போஸ்லைன் ஈஸ்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம நகரில் கறுப்புக்கொடிகளை ஏந்தியும், உருவ பொம்மைகளை எரித்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டயகம - தலவாக்கலையூடான போக்குவரத்து சுமார் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பெருந்தோட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டயகம நகரிலுள்ள அனைத்து கடைகளும் இன்று காலை மூடப்பட்டன. இதேவேளை, ஹட்டன் - பத்தன - கெலிவத்த பகுதியிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாவலப்பிட்டி - தலவாக்கலை வீதியின் கெலிவத்தை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டுள்ளது. எல்ல நியூபேர்க் தோட்ட மக்களும் கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.