ஈக்குவடோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஜூலியன்

ஈக்குவடோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஜூலியன் அஸான்கே

by Staff Writer 20-10-2018 | 1:06 PM
தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து ஈக்குவடோர் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்கே (Julian Assange) தீர்மானித்துள்ளார். இதற்காக, விக்கிலீக்ஸினுடைய சட்டவாளர் பல்தஸார் கர்ஸோன் (Baltasar Garzon) ஈக்குவடோரைச் சென்றடைந்துள்ளார். சுவீடனால் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஜூலியன் அஸான்கே, 2012 ஆம் ஆண்டிலிருந்து லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். ஜூலியன் அஸான்கே மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை அவரது சட்டவாளர்கள் மறுத்து வந்தாலும், பிரித்தானிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் தஞ்சமடைந்திருந்தார். சுவீடன் சட்டங்களை அவர் மீறினார் என்ற குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அவர் தஞ்சம் கோரியிருந்தார். இந்தநிலையில், ஈக்குவடோர் தூதரகத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்பாடல் வசதிகள் எவையுமின்றி, உள ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் குற்றஞ்சாட்டியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, ஈக்குவடோர் அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் வழக்கு விக்கிலீக்ஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.