கட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் தூதுவர்

கட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் தூதுவர்

கட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2018 | 9:12 pm

Colombo (News 1st) கட்டாரில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஸ்டெஃபர்ட் (Stafford) பாடசாலை மீது, அந்நாட்டின் இலங்கைத் தூதுவர் அழுத்தம் விடுப்பதாக அங்குள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெஃபர்ட் பாடசாலை ஆசிரியர்கள் இருவரும் நூலக பொறுப்பதிகாரியும் தூதுவரின் உத்தரவிற்கு அமைய அண்மையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றனர்.

இலங்கையர்களின் பிள்ளைகளுக்காக கட்டாரிலுள்ள ஒரேயொரு இலங்கைப் பாடசாலையாக டோஹாவிலுள்ள குறித்த ஸ்டெஃபர்ட் பாடசாலை விளங்குகின்றது.

இந்த பாடசாலைக்கும் இலங்கையிலுள்ள ஸ்டெஃபர்ட் சர்வதேச பாடசாலைக்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை.

தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையூடாக நிர்வகிக்கப்பட்ட இந்த பாடசாலை மீது, கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகேவினால் பாரிய அழுத்தங்கள் விடுக்கப்படுவதாக அந்நாட்டில் வாழும் இலங்கையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பாடசாலையின் தலைவராக செயற்பட்ட பாடசாலையின் நிறுவுனரான குமுது பொன்சேகா மற்றும் பணிப்பாளர் சபையை நீக்கி, புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமித்து, அதிபரை நீக்கி புதிய அதிபரை நியமித்து இராஜதந்திரி ஒருவர் செயற்பட வேண்டிய முறைக்கு மாறாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் செயற்பட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலையின் இரண்டு ஆசிரியர்களையும் 4 வருடங்களாக பாடசாலையில் சேவையாற்றிய நூலக பொறுப்பதிகாரியையும் நீக்குவதற்கு தூதுவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூதுவரினால் தொடர்ந்து விடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் கட்டார் பொலிஸாருக்கு முறையிடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த இரண்டு ஆசிரியர்களையும் நூலக பொறுப்பதிகாரியையும் பொலிஸார் கைது செய்தனர்.

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகேவின் அறிவிப்பின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், இவர்களில் இருவரை ஒக்டோபர் 15 ஆம் திகதியும் மற்றைய நபரை ஒக்டோபர் 16 ஆம் திகதியும் விடுதலை செய்வதற்கு கட்டார் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதேவேளை, குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் நூலக பொறுப்பதிகாரி ஆகியோரின் வாழ்வுரிமை அனுமதிப்பத்திரம் கட்டார் அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவுவதற்கு, தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகேவிடம் தொடர்புகொள்வதற்கு பல சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் முயற்சித்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.

இதேவேளை, அண்மையில் கட்டாருக்கு சென்ற இலங்கையின் இரண்டு பிரபுக்களின் பயணப் பொதிகளைக் கொண்டு செல்வதற்கு கட்டார் விமான நிலையத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான தூதுவர், சுமை தாங்கியொருவரின் கடமையை செய்ததாக அரசியல் மேடைகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்