by Staff Writer 20-10-2018 | 9:07 AM
சவுதி அரேபியாவின் காணாமற்போயிருந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி (Jamal Khashoggi), மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் நடந்த மோதலின்போது அவர் உயிரிழந்ததாக சவுதி அரேபிய அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
துணைத் தூதரகத்துக்குள் கஷோகிக்கும் அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அதுவே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாகவும் சவுதி அரேபிய அரச சட்டத்தரணி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த தூதரகத்துக்குள் இருந்த சவுதி அரேபிய மன்னரின் நீதிமன்ற ஆலோசகர் மற்றும் உளவுப்பிரிவின் பிரதித்தலைவர் ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், 18 சவுதி அரேபியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபிய அரச ஊடகம் அறிவித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி காணாமற்போயிருந்தார்.
இந்தநிலையில், அவர் துணைத் தூதரகத்துக்குள்ளேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றஞ்சுமத்தியிருந்தன.
இதனை சவுதி அரேபியா மறுத்திருந்ததுடன், அவர் தமது வேலைகளை முடித்தபின்பு துணைத் தூதரகத்திலிருந்து வௌியேறிச் சென்றுவிட்டதாக தொடர்ந்து அறிவித்தும் வந்தது.
இந்தநிலையில், ஜமால் கஷோகி துணைத்தூதரகத்துக்குள்ளே கொலை செய்யப்பட்டுள்ளதை சவுதி அரேபியா முதல்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை, சவுதி அரேபியாவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்கா, இது தொடர்பிலான விசாரணைகளை மிகத்தீவிரமாக முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த கொலைச் சம்பவத்துடன் சவுதி அரசுக்கு தொடர்பிருக்குமானால் அதன் பின்விளைவுகள் மிகவும் பாரதூரமானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.