இலங்கை தொடர் தோல்வி: 3 – 0 கணக்கில் வென்றது இங்கிலாந்து

இலங்கை தொடர் தோல்வி: 3 – 0 கணக்கில் வென்றது இங்கிலாந்து

இலங்கை தொடர் தோல்வி: 3 – 0 கணக்கில் வென்றது இங்கிலாந்து

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2018 | 8:26 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 3 – 0 என கைப்பற்றியது.

இன்று நடைபெற்ற நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி வழமைபோன்று தடுமாற்றத்திற்குள்ளானது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் முதல் விக்கெட் 19 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

அணித்தலைவர் டினேஷ் சந்திமால் 33 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 23 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.

நிரோஷன் திக்வெல்ல 52 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 66 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு நம்பிக்கையூட்டினர்.

பின்வரிசையில் இணைந்துகொண்ட திசர பெரேரா மற்றும் அகில தனஞ்சய ஜோடி ஏழாம் விக்கெட்டுக்காக 46 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

திசர பெரேரா 44 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆக, அகில தனஞ்சய 26 பந்துகளில் 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் மொயின் அலி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 76 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்களையும் இழந்தது.

ஜேசன் ரோய் 45 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.

மழையின் ஆதிக்கம் தொடர்ந்தும் நீடித்த நிலையில், டக்வேர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் TV1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்