கலால் வரி: பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்

கலால் வரி சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்: நீதிமன்றம் அறிவிப்பு

by Staff Writer 19-10-2018 | 3:55 PM
Colombo (News 1st) கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தங்காலை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 7 வழக்குகளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை இதற்கு முன்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, இந்த குற்றங்கள் தொடர்பான வழக்கை தாக்கல் செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்தனர். இந்த விடயங்களை ஆராய்ந்த அப்போதைய நீதவான் மஹி விஜேவீர, வழக்கை விசாரணைக்கு எடுக்காது ஒத்திவைத்தார். பின்னர், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்குகள் தங்காலை நீதவான் லிலான் வருசவிதான முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பொலிஸார் சார்பில் சட்டத்தரணி ருவன் குணசேகர மன்றில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தார். இவற்றை ஆராய்ந்த நீதவான், கலால் வரி சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என தீர்ப்பு வழங்கினார்.