சம்பள உயர்வு கோரி வீதிகளில் அமர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வு கோரி வீதிகளில் அமர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள உயர்வு கோரி வீதிகளில் அமர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2018 | 7:53 pm

Colombo (News 1st) 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பெருந்தோட்ட மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்திய வண்ணம் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அக்கரப்பத்தனை – அல்பியன், பிரஸ்டன்ட், நியூ – பிரஸ்டன்ட், ஆட்லு, சென் மார்கிரட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் – போடைஸ் வீதியில் மக்களின் ஆர்ப்பாட்டத்தினால் அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்து, சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் பறை அடித்தும், உருவ பொம்மையொன்றை எரித்தும் தமக்கான சம்பளத்தை அதிகரித்துத் தருமாறு வலியுறுத்தினர்.

இதேவேளை, ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையின் லிந்துலை பகுதியில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மௌசாகலை, லாகஸ்சேனை, வலஹா, மட்டுக்கலை, டி.ஆர்.ஐ. ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பத்தனை – கிரேக்லி தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரேக்லி தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையிலிருந்து ஊர்வலமாக பத்தனை நகர் நோக்கி சென்ற மக்கள், தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பத்தனை நகரத்தின் கிரேக்லி சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பெருந்தோட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

சம்பள உயர்வை வலியுறுத்தி தலவாக்கலை நகரிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ட்ருப், கிளனமெரா, கட்டுக்கலை மற்றும் தலவாக்கலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை பஸ் நிலையத்திலிருந்து நகரின் சுற்றுவட்ட பாதை வரை மக்கள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாவலப்பிட்டி – கெட்டபுலா – வெஸ்டோல் சந்தியில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பார்கேபள், கெட்டபுலா, வெஸ்டோல், ரிலாகல, எதட்டன் தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்டாரவளை – நாயபெத்த தோட்ட மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாயபெத்த தேயிலைத் தொழிற்சாலையில் இருந்து பேரணியாகச் சென்ற மக்கள் , பண்டாரவளை – பூணாகலை பிரதான வீதியில் கறுப்புக்கொடிகள் ஏந்தியும் வீதியில் அமர்ந்தும் எதிர்ப்பை வௌியிட்டனர்.

1000 ரூபா சம்பளம் கோரி, ஹட்டன் – நோர்வூட் சந்தியிலும் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்