ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2018 | 8:42 pm

Colombo (News 1st)  சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றன.

யாழ். ஊடக மையத்தின் ஏற்பாட்டில் யாழ். மாநகர மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று பிற்பகல் நடைபெற்றன.

இதன்போது, நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுப்பேருரை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதேவேளை, ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது நினைவுதின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

பேனா முனையால் மக்களின் குரலாக எதிரொலித்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் மறைந்து இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

யுத்தத்தின் உச்சம் யாழில் நிலை கொண்டிருந்த வேளையில், தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் குரலாக யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊடகவியலாளர் நிமலராஜன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நிமலராஜனின் வீட்டின் ஜன்னலினூடாக இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் தான் எழுதிய கட்டுரை மீது இரத்தம் வடிய நிமலராஜனின் உயிர் பிரிந்தது.

ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொண்ட இரு ஆயுததாரிகள் நிமலராஜனின் தந்தையையும் கத்தியால் தாக்கி விட்டு கைக்குண்டை வீசியவாறு தப்பிச் சென்றிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் நிமலராஜனின் தந்தை, தாய் உட்பட மருமகனும் காயமடைந்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், அதியுயர் பாதுகாப்பு பகுதிக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் நுழைந்தது எவ்வாறு என்ற சந்தேகம் இன்றுவரை மக்கள் மத்தியிலுள்ளது.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்காளாகியும் சூத்திரதாரிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்