காணிகளை மீள கையளிப்பது குறித்து ஆராய குழு நியமனம்

பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமனம்

by Staff Writer 18-10-2018 | 7:00 AM
Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படையினரால், விவசாய செய்கை மேற்கொள்ளப்படும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் 4 பிரதான விவசாய பண்ணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விவசாய காணிகளின் உரிமையாளர்கள் தற்போது உள்ளார்களா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் காணி உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என கடந்த வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்தப் பணிப்புரைக்கு அமைய, இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 500 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அவற்றை பொதுமக்களுக்கு மீள கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் வடக்கில் 88,599 ஏக்கர் காணிகளும் கிழக்கில் 61,126 ஏக்கர் காணிகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது வடக்கில் 11,557 ஏக்கர் காணியிலும், கிழக்கில் 3,225 ஏக்கர் காணியிலுமே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.      

ஏனைய செய்திகள்